14 November 2006

எலும்புத்துண்டு...

இலவசம்ங்கிற வார்த்தை எல்லா மனுசனுக்குள்ளும் ஒரு தற்காலிக இன்பத்தை தோற்றுவிக்கும்ங்கிறது உண்மைதானுங்க. அது தெரிஞ்சிதானுங்களே, எல்லாக் கம்பெனி காரனுவளும், ஒன்னு வாங்கு, ஒன்னு இலவசம்ங்குறானுங்க. நாமளும் மதி மயங்கி, பின்னாலயே போறோம்.

கம்பெனிகாரப் பயலுவ இலவசம் கொடுக்கறத விடுங்க. அவன் அவன் வியாபாரம் பெருகுறதுக்கு, என்னத்தையும் கொடுத்துட்டு போறான். நாமளும், மனசுக்கு பிடிப்பதுக்கு ஏத்தா மாதிரி, கையில இருக்குற காசுக்குத் தக்கன வாங்கிட்டு போறோம். லாபமோ, நட்டமோ நம்மளோட இருந்துட்டுப் போறது.

ஆனா, இதே வேலய, இப்ப அரசியல் வாதிங்களும் பண்ண ஆரம்பிச்சுட்டானுங்க. இலவச வேட்டி சேலை, இலவச மின்சாரம், இலவச சத்துணவு, இன்னும் என்னல்லாமோ?... அது சரி, இவங்க என்னா, மக்களுக்குச் சேவை பண்ணவா கட்சி நடத்துறாங்க, கட்சி கம்பெனிதானுங்களே நடத்துறாங்க..அப்படித்தான இருக்கும்.

இந்த மாதிரி இலவசம்லாம் கொஞ்சம் ஏத்துக்கிடலாம் போலத்தான் இருந்தது. ஏதோ பாமர மக்களுக்கு பயன் பட்டாச் சரின்னு பட்டது.

ஆனா, இப்ப நடந்து முடிஞ்ச தேர்தல்ல பாத்தா, ஒரே சிரிப்பாணியா ஆக்கிபுட்டாங்க. இலவச டிவியாம், இலவச நிலமாம், கம்யூட்டர் இலவசமாம்.. தாலிக்கு தங்கம் இலவசமாம்.. ஒரு ஒரு நாளும், இவன் என்னா இலவசம் கொடுப்பான்..அவன் என்னா இலவசம் கொடுப்பான்னு, தமிழன 'ஆ.' ன்னு வாய் பாக்க வச்சுட்டு, ரெண்டுல ஒன்னு ஆட்சிக்கு வந்தாச்சு.

ஒரு பக்கம் டி.வி இலவசம் கொடுத்திட்டு, இன்னொரு பக்கம் சன் டிவியை கட்டண டிவியாக்கியாச்சு. அவனுங்க எல்லாம் புத்திசாலிங்க. நமக்குத்தான் மொட்டையும், சந்தனமும்.

இந்த சன் டிவி ஆரம்பிக்கப்பட கட்சிப் பண டெபாசிட்டின் பேரில, கடன் வாங்கப்பட்டதாச் சொன்னாங்க. அந்தக் கட்சிப் பணம், உருட்டல்,மிரட்டலிலும், சில கட்சி விசுவாசிகளின் நிதியிலும் சேர்ந்தது. அது வளர்ந்து, எங்கேயோ போயி நிக்குது, நம்ம கையில ஒரு இலவச டிவி வரும்னு எதிர்பார்ப்பு. இந்த இலவச டிவி வேணும்னா, நூறு ரூபாய் கொடுத்து ரிஜிஸ்டர் பண்ணனும்னு ஒரு கூட்டம் ஏமாத்தி பணம் பறிச்சுது. எரியிற வீட்டுல புடுங்கினது ஆதாயம்ங்கிற மாதிரி, இலவச ஆசையில இருக்குறவங்கிட்ட புடுங்கித்தின்னது ஒரு கூட்டம்.

இதெல்லாம் சரி, எத்தன பேருக்கு டிவி கொடுத்திருக்காக? எல்லாம் ஒழுங்கா தெரியுதா? கட்சிக்காரனா இருந்தாத்தான் டிவியா? இல்ல எல்லாருக்கும் கிடைக்குதா? அதெல்லாம், யாருக்கு கவலை. ஏட்டளவில திட்டத்த அமுலாக்கியாச்சு.


இந்தத் டிவியில, குடும்ப பத்திரிக்கை, நாளிதழ் எல்லாத்தையும் அப்பப்ப விளம்பரம் பண்ணி, அத வாங்க இலவசத்தக் கொடுத்து, அப்படியே ஒரு சுழல்ல போய்கிட்டு இருக்கு.

இந்த இலவச டிவி திட்டத்தால, மக்களுக்கு என்னங்க பயன்? தமிழகத்துல இருக்கற மொத்தம் 156 லட்சம் குடும்பங்கள்ள, 53 லட்சம் குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்குதாம். எந்த அடிப்படையில இந்தத்திட்டமெல்லாம் அவன மேல கொண்டுவர உதவப் போகுது? யாராவது தெரிஞ்சவங்க சொல்லுங்க.

இன்னொரு பக்கம், தமிழ்-ல தலைப்பு வக்கிற திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி இலவசமாம். என்னே ஒரு மக்கள் வளர்ச்சித் திட்டங்கள்.

கூட இருக்கிற கட்சிகளாவது ஏதாவது உருப்படியா பண்ணக் கேக்குதா? எங்களுக்கு அரசு விளம்பரத்த கொடுங்க, நாங்களும் கஜானா காசுல கொஞ்சம் எங்க வூட்டுக்கு கொண்டு போறோம்ங்கிறாங்க.

குரைக்கிற நன்றியுடைய பிராணிக்கு எலும்புத்துண்டு மாதிரி, இந்த மாதிரியான இலவசத்திட்டங்கள்ல கண்துடைப்பு பண்ணிட்டுப் போயிடுறாங்க. இதப் பத்தியெல்லாம் யோசிக்காம, நம்ம வாலு, அடுத்து வர்ர எலும்புத்துண்டுக்கு ஆடிக்கிட்டு இருக்கு.


இத்தனை கால அரசியல் வாழ்க்கையில, இவங்க வாங்குன சம்பளத்துல எவ்வளவு சேத்து வச்சிருப்பாக தெரியுமா? குத்து மதிப்பா, செல்வன் ஒரு பதிவு போட்டிருக்காரு பாருங்க. புரியும்.

கருணாநிதி, ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு எவ்வளவு ?


மக்களுக்குச் செலவழிக்க, எவ்வளவு பணம் ஒதுக்கப்படுது, எவ்வளவு செலவு பண்ணுறாங்கன்னு, தெரிய ஹரிகரனோட இந்தப் பதிவ படிங்க.

தமிழகநிதி 234 எம்.எல்.ஏ+ 39எம்.பி- கூட்டுக்களவாணித்தனம்

இவ்வளவு காசு பணம் சேக்கிற அரசியல்வாதிங்க எல்லாம், சொந்தக் காசுல வேணாம்யா, அடிக்கிற காசுல ஏதாவது பொது ஜனத்துக்குப் பயன்படுற மாதிரி இலவச மருத்துவ மனைகளோ, இலவச பள்ளிச் சாலைகளோ திறந்து மக்களுக்கு உதவுறாங்களா சொல்லுங்க.


ஒன்னு நிசமுங்க... ஏமாறுகிற மக்கள் நினைப்புல வச்சுக்கணும்.. 'வாக்குறுதிகள் இலவசம்.. வாக்குகள் அதன் விலை'ங்குறது தான் அது.

ம்....என்னத்த நான் சொல்லுறது... ஏதோ டிவியில 'உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக..ன்னு' ஏதோ சொல்றாக.. என்ன படம்னு கேட்டுட்டு வாரேன்..மிச்சத்த அப்புறமா பேசலாம்..